Last Updated:
ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மத் ஷா தனி ஆளாகப் போராடி இன்னிங்ஸை தாங்கிப் பிடித்தார். அவர் 216 பந்துகளை எதிர்கொண்டு, 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 105 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரஹ்மத் ஷா, வங்கதேசத்திற்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் தனது கேப்டன் பொறுப்பின் தொடக்கத்திலேயே வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், அவர் அபாரமான சதம் அடித்து பல புதிய சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். கடந்த ஜூலை மாதம் ஹஷ்மத்துல்லா ஷாஹிதியிடமிருந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரஹ்மத் ஷா, தனது முதல் டெஸ்ட் கேப்டன்ஷிப் இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சில் 346 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தன்சித் ஹசன் தமீம் 83 ரன்களும், ஷத்மான் இஸ்லாம் 67 ரன்களும், லிட்டன் தாஸ் 53 ரன்களும் எடுத்தனர். அப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் சஃபி 4 விக்கெட்டுகளையும், யாமீன் அஹமத்சாய் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மத் ஷா தனி ஆளாகப் போராடி இன்னிங்ஸை தாங்கிப் பிடித்தார். அவர் 216 பந்துகளை எதிர்கொண்டு, 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 105 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
டெஸ்ட் கேப்டன் பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் இதன் மூலம் படைத்தார். அவருடன் இணைந்து தொடக்க வீரர் அப்துல் மாலிக் 62 ரன்களும், விக்கெட் கீப்பர் இக்ராம் அலிகில் 32 ரன்களும் சேர்த்தனர். எனினும், மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 240 ரன்களுக்கு சுருண்டது.
வங்கதேச அணியின் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மகமூத் அற்புதமாகச் செயல்பட்டு ஹாட்ரிக் விக்கெட் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும், டெஸ்ட் அரங்கில் 50 விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். முதல் இன்னிங்ஸ் முடிவில் வங்கதேச அணி 106 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


