International
oi-Vigneshkumar
நேபாளம்: இமயமலை நாடான நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கோர்கா மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட வெள்ளத்தில் 35க்கும் மேற்பட்ட வீடுகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும், அங்குள்ள நீர்மின் திட்டமும் சேதமடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோன்ற பேரிடரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் வெள்ளம் ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள சும்னுப்ரி கிராமத்தில் இன்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது. திரிசூலி ஆற்றின் துணை ஆறான புதிகண்டகி ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததே இதற்கு காரணமாகும்.

திடீர் வெள்ளம்
இன்று காலை 6.30 மணிக்கு 3.66 மீட்டராக இருந்த நீர்மட்டம், காலை 8.40 மணிக்கு 8.43 மீட்டராக உயர்ந்தது. ஆபத்து அளவாக நிர்ணயிக்கப்பட்ட 5 மீட்டரை தாண்டி நீர்மட்டம் உயர்ந்ததாக நேபாளத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக காலை 8.30 மணி முதல் 8.40 மணி வரையிலான 10 நிமிடங்களில் மட்டும் நீர்மட்டம் 2 மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் ஆற்றின் நீர்மட்டத்தை அளவிடும் மையமும், அதனுடன் இருந்த பாலமும் அடித்து செல்லப்பட்டதால், கூடுதல் தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்
பொதுவாக வெள்ளம் என்பது அதீத மழை கொட்டி தீர்க்கும்போது ஏற்படும். ஆனால், இந்த வெள்ளம் மழையால் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாறாக ஆற்றின் நீரோட்டம் ஏதோ ஒரு காரணத்தால் தடைப்பட்டு, பின்னர் அந்த தடை உடைந்ததால் திடீரென வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆற்றின் நீரோட்டத்தில் ஏதேனும் பாறை அல்லது கற்கள் விழுந்து தடை ஏற்பட்டு இருக்கலாம். அந்த தடை உடைந்தவுடன் வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், வெள்ளத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய விரிவான ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
बुढीगण्डकीमा आएको बाढीबाट प्रभावित केही क्षेत्रको हेलिकोप्टरबाट लिइएका तस्विर https://t.co/gPNa0jWQ8t
— NDRRMA (@NDRRMA_Nepal) October 11, 2026
மீட்பு பணிகள்
இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அதேசமயம் ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், மாலை வரை ஆற்றங்கரை மற்றும் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள நேபாள ராணுவம் மற்றும் விமானப்படை விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நிலச்சரிவு அபாயம் உள்ள ஜகத் பகுதியில் சிக்கியிருந்த 6 பேர் விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். காத்மாண்டுவில் தயார் நிலையில் இருந்த விரைவு நடவடிக்கை குழுவும் விமானம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நேபாள வெள்ளம்
கடந்த ஆகஸ்ட் 26ம் தேதியும் நேபாளம்-திபெத் எல்லைக்கு அருகே இதேபோல ஒரு வெள்ளம் ஏற்பட்டது. அப்போது பனிப்பாறை சரிந்து நீரோட்டத்தில் தடை ஏற்பட்ட நிலையில், அந்த பனிப்பாறை உடைந்ததில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் 1,457 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் மாயமாகினர்.
அப்போது இமயமலை எல்லை பகுதியில் உருவான வெள்ளம், தெற்கே பாயும் போடேகோஷி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், நீர்மின் திட்டங்களும் சேதமடைந்தன. இந்த பேரிடரின் பாதிப்புகளில் இருந்து நேபாளம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், கோர்கா மாவட்டத்தில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

