Last Updated:
அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் தகவல் கொடுத்த பிறகும் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மீது முதல் தகவல் அறிக்கை பதியாதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் தகவல் கொடுத்த பிறகும் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மீது முதல் தகவல் அறிக்கை பதியாதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் மற்றும் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு தொடர்புடைய எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனங்களுக்கு இடையேயான பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு எந்த சேவையும் பெறாமல் CMRL நிறுவனம் மொத்தம் ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஹவாலா பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாக கேரள டிஜிபிக்கு கடிதம் அனுப்பிய அமலாக்கத்துறை, பினராயி விஜயன், வீணா, முகமது ரியாஸ் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அறிவுறுத்தியது.
ஆனால், கேரள அரசு சிறப்புப் புலனாய்வுக் குழு மூலம் முதற்கட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கறிஞர் கே.எம்.ஷாஜகான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் தகவல் கொடுத்த பிறகும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் முதற்கட்ட விசாரணை நடத்துவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி, மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.


