Last Updated:
கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டது என ஆக்டிவாக அரசியல் பணிகளை கவனித்து வந்த துரைமுருகன், அண்மையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்ற துரைமுருகன் அதில் உரையாற்றவும் செய்தார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்ட தகவலில் இதயநோய் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு அதில் இருந்து தேறிவந்த துரைமுருகன் உடல் எடை குறைந்து காணப்படுகிறார்.
எனினும், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டது என ஆக்டிவாக அரசியல் பணிகளை கவனித்து வந்தார். அண்மையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்ற துரைமுருகன் அதில் உரையாற்றவும் செய்தார்.
திமுகவில் அண்ணா, மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரை தொடர்ந்து நான்காவதாக திமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார் முன்னாள் அமைச்சர் துரைமுருகன். 1965-ல் இந்தி எதிர்ப்பு போரில் முதலில் கைதான மாணவர் தலைவரான துரைமுருகன் அண்ணாவுடன் சிறைவாசம் இருந்தவர். மிசா காலத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை சென்றவர். அண்ணா காலத்தில் திமுகவில் ஐக்கியமாகி திமுகவில் தணிக்கை குழு உறுப்பினர், மாணவர் அணி செயலாளர், தலைமை கழக முதன்மை செயலாளர், திமுக துணை பொதுச்செயலாளர், திமுக பொருளாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் 13 முறை எம்எல்ஏவாக தேர்வான முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சாதனையை சமன் செய்யும் இடத்தில் இருந்த துரைமுருகன் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டு தோல்வியை தழுவியதால் அந்த சாதனை நடக்காமல் போனது. இதுவரை 13 தேர்தல்களை சந்தித்துள்ள துரைமுருகன், 1971-ம் ஆண்டு முதன் முறையாக காட்பாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் மட்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டவர், அதன்பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் காட்பாடி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்.
இதில் 1984 மற்றும் 1991 மற்றும் 2026-ம் ஆண்டுகளில் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் அமைச்சரவையில் பொதுப்பணி துறை, நீர்வள துறை, சட்ட துறை, கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை, மின்சார துறை அமைச்சராக இருந்து நீர்வள துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர்.


