3 மாதத்தில் 55% உயர்ந்த பங்கு.. மீண்டும் 46% உயருமா.. ஜாக்பாட் கொடுக்கப் போகும் தங்க நகைக் கடை பங்கு!
தங்கம் விலை பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்தாலும் நகைக் கடைகளின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்த வண்ணமாக உள்ளது, தற்போது பண்டிகை காலம் + அதிகப்படியாகத் திருமணங்கள் நடக்கும் காலம் என்பதால் நகை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நகைக் கடை பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் இந்திய நகை விற்பனை சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் கடந்த 3 மாதத்தில் சுமார் 55 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 355 ரூபாயில் இருந்து 556 ரூபாயைத் தொட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுத்த நிலையில், முதலீட்டு நிறுவனமான ஜெப்ரீஸ் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்கும் அதிரடியாக உயரும் எனக் கூறியது தற்போது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக உள்ளது.

ஜெப்ரீஸ் இந்தியா அறிக்கையின் படி கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் தற்போதைய பங்கு விலையைக் காட்டிலும் 46 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கு விலை 830 ரூபாய் வரையில் உயரும் எனக் கணித்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் 0.07 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 553.90 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இதேவேளையில் இந்திய மக்கள் தங்கம் விலை அதிகரித்துள்ளதால் தங்க நகை வாங்குவதில் பெரும் மாற்றம் நடந்து வருகிறது. குறிப்பாக 18 கேரட், 14 கேரட் தங்க நகைகள், வெள்ளி நகைகள் என விலை சுமை இல்லாத நகைகளை வாங்கத் துவங்கியுள்ளனர்.
இதற்கு ஏற்றார் போல் நகைக் கடைகளும் லைட் வெயிட் நகைகளை செய்யும் சீனாவின் 5D Hard தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்துள்ளது. இதனால் தங்கம் நகை வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் தனது வர்த்தகத்தைப் பிராந்திய அளவில் விரிவாக்கம் செய்ய புதிய பிராண்டில் நகைக் கடைகளைத் திறந்துள்ளது, இதேபோல் நகைக் கடை வர்த்தகத்தில் புதிய வர்த்தக மாடலையும் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் கல்யாண் ஜுவல்லர்ஸ் தற்போது ஹைப்பர்லோக்கல் அளவில் இறங்கி வர்த்தக வித்தியாசத்தை ஈடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் 46 சதவீதம் வரையில் உயரும் என ஜெப்ரீஸ் கணித்துள்ளது. கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் கடந்த 5 நாளில் 3.55 சதவீதம் வரையிலும், 2026ஆம் ஆண்டில் 14.39 சதவீதம் வரையிலும் உயர்ந்துள்ளது.

