
தாம் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், அதனால் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தான் முற்றிலும் தகுதியானவர் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு தமக்கு வழங்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கான பிரசாரத்தை முடித்துக்கொண்டு வாஷிங்டன் திரும்பிய அவர், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
வேறு எந்த உலகத் தலைவரும் செய்யாத வகையில் தாம் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், எனவே அமைதிக்கான நோபல் பரிசைப் பெற தாம் முழுத் தகுதியுடையவர் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், தமது அமைதி முயற்சிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், விரைவில் மற்றொரு மோதலும் இதில் இணையக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா – பாகிஸ்தான், இஸ்ரேல் – ஈரான், கம்போடியா – தாய்லாந்து, செர்பியா – கொசோவோ, ருவாண்டா – காங்கோ ஜனநாயகக் குடியரசு, எகிப்து – எத்தியோப்பியா மற்றும் ஆர்மீனியா – அஜர்பைஜான் ஆகிய விவகாரங்களில் அமெரிக்கா ஆற்றிய பங்கை டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இவற்றில் பல அதிகாரப்பூர்வமான போர்கள் அல்ல என்றும், அமெரிக்காவின் பங்களிப்பு ஒவ்வொன்றிலும் வேறுபட்டிருந்தது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தனது முந்தைய பதவிக்காலத்தில் வடகொரியாவுடனான தூதரக நகர்வுகளுக்காக நார்வே அரசியல்வாதிகள் மற்றும் ஜப்பானின் அப்போதைய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் தம்மைப் பரிந்துரைத்ததாக டிரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
2020இல் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஆபிரகாம் ஒப்பந்தங்களுக்காகவும் தாம் நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று வாதிட்ட அவர், 2009இல் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு அப்பரிசு வழங்கப்பட்டதையும் விமர்சித்துள்ளார்.
இரண்டாவது பதவிக்காலத்திலும் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்துள்ள டிரம்ப், 2025 பெப்ரவரியில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்தபோதும் தமக்கு விருது வழங்கப்படாதது குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார். தமக்கு விருதை மறுப்பது நோபல் குழுவிற்கே அவப்பெயர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், கிரீன்லாந்து விவகாரத்தில் நார்வேயுடன் ஏற்பட்ட மோதலின்போது, எட்டு போர்களைத் தடுத்த தமக்கு நோபல் பரிசு தராததால், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய கட்டாயம் தமக்கு இல்லை என நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு டிரம்ப் செய்தி அனுப்பியிருந்தார்.
ஆனால், வெற்றியாளர்களை நார்வே அரசாங்கம் தீர்மானிப்பதில்லை என்றும், சுதந்திரமான நோபல் குழுவே முடிவு செய்கிறது என்றும் ஸ்டோர் தெளிவுபடுத்தியிருந்தார்.
2025ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வெள்ளை மாளிகையில் டிரம்பைச் சந்தித்து தனது பதக்கத்தை அவரிடம் வழங்கிய போதிலும், நோபல் பரிசை மாற்றவோ பகிரவோ முடியாது என நோபல் குழு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
தற்போது 2026ஆம் ஆண்டுக்கான விருதுக்கு இஸ்ரேல், பாகிஸ்தான், கம்போடியா தலைவர்கள் டிரம்பைப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியானாலும், மொத்தம் 287 பேர் பரிசீலனையில் உள்ளதாகக் குழு கூறியுள்ளது.
அதேசமயம், ஈரானுடனான தற்போதைய ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், டிரம்பிற்கு விருது கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

