Last Updated:
விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு கோரிய நிலையில், அதற்கு கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.
தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காவிரியில் 15 டிஎம்சி தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், தங்களது அணைகளில் தற்போது 40 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகக் கூறி, தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு தரப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு கோரிய நிலையில், அதற்கு கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து, விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை அளித்தது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டார்.


