செம்மணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பில், தேவையான கட்டத்தில் சர்வதேச நிபுணர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (ஒக்டோபர் 8, 2026) இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனால் நிலையியல் கட்டளை 22/7 இன் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
“செம்மணி மனிதப் புதைகுழி மட்டுமன்றி, ஏனைய மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன. நீதிமன்றத்தின் கண்காணிப்பிலேயே அந்தப் பணிகள் இடம்பெறுகின்றன. அந்த விடயத்தில் சர்வதேச விசேட நிபுணர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளோம். ஐக்கிய நாடுகள் சபை அல்லது ஐசீசீஆர் (ICCR) ஆகியவற்றின் ஆய்வாளர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
எவ்வாறாயினும், செம்மணியில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர், தேவையேற்படும்போது டி.என்.ஏ. (DNA) தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளவும் மற்றும் காலங்கள் தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும் விசேட நிபுணர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

