இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (8.10.2026) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், ‘Dream Olympics’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று, பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 7 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கங்கள் வென்ற 5 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 60 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், 51-வது தேசிய சப்-ஜூனியர் மகளிர் கூடைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டு அணியின் 12 வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக 18 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், ஜப்பானில் நடைபெறவுள்ள 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கவுள்ள ஒரு வீரர் மற்றும் ஒரு வீராங்கனைக்கு 14 லட்சம் ரூபாய்க்கான சிறப்பு நிதி உதவிக்கான காசோலைகள் என மொத்தம் 32 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 8 கோடியே 57 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டினார்.
விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் வகையிலும், சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குகொண்டு வெற்றிபெறும் வகையிலும், அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் எனப் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அத்துடன், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டங்களின் மூலமாகவும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொள்ளும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு நிதியுதவி 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொண்ட 37 வீரர், வீராங்கனைகளுக்கு 2 கோடியே 59 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாகவும், வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜப்பான் நாட்டில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 11 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், 13 வீரர், வீராங்கனைகள் 3 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 13 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இதில், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டின் முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளதோடு, தடகளம் மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 நொடிகளில் கடந்து, இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து வரலாறும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கோல் ஊன்றித் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பரணிகா இளங்கோவன், இப்பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
