Last Updated:
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கோ வாரண்டோ (Quo Warranto) ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சூரி பைலா (Suri Paila) என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்தல் ஆணைய சட்டம் 2023இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை மீறி இவர்களை நியமித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணைய சட்டத்தின் பிரிவு 6-இன் படி, ஒவ்வொரு காலிப் பணியிடத்துக்கும் ஐந்து பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நியமிக்கப்பட்ட அதிகாரிகள் யாரும் இதற்கு முன் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொண்டதில்லை என்றும், பிரிவு 5-இல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புகளை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அந்த பதவிகளில் வகிக்கிறார்கள் என்ற விளக்கம் கோரி “கோ வாரண்டோ” பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு ஏற்கனவே உள்ள Z+ பிரிவில் கூடுதல் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துவரும் சூழலில், அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


