இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, மைடின் முகமது ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (மைடின்) நிறுவனம், “பிரகாசமான தீபாவளி” பிரச்சாரத்தின் மூலம் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சமூக இல்லங்களுக்கு பொருட்களை வழங்க உள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் நாமும் அவர்களுடன் கைகோர்ப்போம் என்று ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.


தேவையுள்ளவர்களுடன் தீபாவளியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கான மைடினின் முயற்சியே இந்தப் பிரச்சாரம் என்று மைடினின் நிர்வாக இயக்குநர் அஹிம்மத் மைடின் கூறினார். இந்த முன்னெடுப்பை வெற்றிபெறச் செய்வதற்காக மக்கள் ஓசை நாளிதழ் , ராகா, மின்னல் எஃப்எம் ஆகியவை மைடினுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


மைடின் நிறுவனத்தைப் பொறுத்தவரை, பண்டிகைக் காலம் என்பது சலுகைகள் மற்றும் விற்பனைகள் பற்றியது மட்டுமல்ல, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கும், தேவையிலுள்ளோருக்கு ஆதரவளிப்பதற்கும் ஆன ஒரு வாய்ப்புமாகும். ‘பிரகாசமான தீபாவளி’ பிரச்சாரத்தின் மூலம், நாங்கள் ஆதரிக்கும் சமூகத்தினரும் தீபாவளியின் மகிழ்ச்சியை உணர்வதை உறுதிசெய்ய விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
‘மைடின் பிரிஹதின்’ முன்முயற்சியின் மூலம், சமூக நலத்துறையில் (JKM) பதிவுசெய்யப்பட்ட 15 சமூக இல்லங்களுக்கு ரொக்க வவுச்சர்கள், அடிப்படைத் தேவைகளாக 100,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான பொருட்களை மைடின் நிறுவனம் தனது விநியோகஸ்தர் கூட்டாளர்களுடன் இணைந்து பெற்று கொண்டனர்.


அக்டோபர் 30 வரை மைடின் கிளைகளில் வைக்கப்பட்டுள்ள நன்கொடைக் கூடைகள் மூலம் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கலாம் என்று அஹிம்மத் மைடின் கூறினார். நவம்பர் 1 முதல் 8 வரை வழங்கப்படும் உதவிகளின் மூலம், அதிகமான மக்கள் தீபாவளியின் மகிழ்ச்சியை அனுபவிக்க, வாடிக்கையாளர்களும் பங்களிக்க வரவேற்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், “பிரகாசமான தீபாவளி” பிரச்சாரத்தில், டாக்கா லீ ஸ்டுடியோவுடன் இணைந்து பாம்பே பஜாரும் இடம்பெறுகிறது. இது இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு வணிகர்களை ஒன்றிணைத்து, அவர்களின் தயாரிப்புகளை மைடின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


இந்த முயற்சி, இந்திய சமூகத்தின் தயாரிப்புகளையும் கலாச்சாரத்தையும் சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதோடு, சிறு வணிகர்கள் தங்கள் தொழில்களை விரிவுபடுத்த ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது என்று அஹிம்மத் மைடின் கூறினார்.
மைடின் எப்போதும் சிறு மற்றும் உள்ளூர் தொழில்முனைவோருக்கு பரந்த சந்தையை அணுகுவதற்கான வாய்ப்புகளைத் திறந்து கொடுத்து ஆதரவளிக்கிறது. பாம்பே பஜார் மூலம், நாங்கள் சிறு வணிகர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு தயாரிப்புகளை அறிந்து கொள்ளவும், முயற்சி செய்யவும் ஒரு அனுபவத்தையும் வழங்குகிறோம் என்று அவர் கூறினார்.
‘பிரகாசமான தீபாவளி’ பிரச்சாரமானது, மைடின் பிரிஹதின் மூலம் சமூகப் பொறுப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அதன் பலன்களைச் சமூகத்துடன் பகிர்வதிலும் மைடின் மேற்கொண்டுவரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.



