ஐடி ஊழியர்களை தொடர்ந்து இந்திய மாணவர்களுக்கும் வேட்டு வைக்கும் டிரம்ப் நிர்வாகம்..!!
டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்கு வருகை தருவதையும் வேலைவாய்ப்பு பெறுவதையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய ஐடி ஊழியர்கள் அதிகமாக பயன்படுத்தும் ஹெச்1பி விசாவில் பல கட்டுப்பாட்டுகளை விதித்த டிரம்ப் அரசு தற்போது அமெரிக்கா வருகை தரும் மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகி வருகிறது.
அமெரிக்காவில் தங்கி படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்து வேலை தேடும் OPT திட்டத்திற்கு சுமார் 70,000 அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 67 லட்சம் ரூபாய் கட்டணம் வசூல் செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை, வெளிநாட்டு மாணவர்கள் படித்து முடித்த பின் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கும் OPT (Optional Practical Training) திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கட்டணம் வசூல் செய்கிறது.

இதுநாள் இந்த கட்டணம் சுமார் 500 டாலர்கள் மட்டுமே இருந்தது. ஆனால், புதிய விதிகளின்படி, கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு புதிய மாணவரின் முதல் OPT விண்ணப்பத்திற்கும் 70,000 டாலரை கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், இந்த அனுமதியை நீட்டிக்க விரும்பினால் ஒவ்வொரு முறை புதுப்பித்தலுக்கும் 30,000 டாலரை கட்டணமாக செலுத்த வேண்டும் என புதிய விதிமுறையை முன்மொழிந்துள்ளது.
அமெரிக்காவில் F-1 விசா எனப்படும் மாணவர் விசா பெற்றவர்கள் தங்கள் படிப்பு காலத்திலோ அல்லது படிப்பு முடிந்த பின்னரோ, தாங்கள் படித்த துறையுடன் தொடர்புடைய வேலைகளில் நேரடியாக பயிற்சி பெற்று அனுபவம் பெற OPT திட்டம் உதவுகிறது. பொதுவாக படிப்பு முடிந்த பின் 1 வருடத்திற்கு இந்த அனுமதி கிடைக்கும். ஆனால், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM – Science, Technology, Engineering, and Math) போன்ற குறிப்பிட்ட துறைகளில் பட்டம் பெறுபவர்கள் கூடுதலாக மேலும் 2 ஆண்டுகள் இந்த அனுமதியை நீட்டிக்க தகுதி பெறுவர்.
இதில் புதிய விதிகளை கொண்டுவருவதன் மூலம் மாணவர் விசா முறையில் உள்ள முறைகேடுகளையும், மோசடிகளையும் தடுக்க முடியும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கூறுகிறது. ஆனால் வெளிநாட்டு மாணவர்களை அதிக அளவில் நம்பி இயங்கும் அமெரிக்க கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இது பெரும் அடியாக அமையும். பல பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து கிடைக்கும் கல்விக்கட்டண வருவாயை நம்பியே இயங்குகின்றன.
டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்கள் மீது கெடுபிடி காட்டுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டே ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தை திடீரென ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம், பலரை நாடு கடத்தியது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முன்மொழிவு உடனே நடைமுறைக்கு வரவில்லை. சட்டமாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உயர்கல்வி நிறுவனங்களும், டெக் நிறுவனங்களும் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்புள்ளதாகவும், இதனால் இதன் நடைமுறை தாமதமாகும் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

