2027ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக புதன்கிழமை (ஒக்டோபர் 07, 2026) தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்தவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

பட்ஜெட் உரை
வரவு-செலவுத் திட்ட உரை நிதியமைச்சரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நவம்பர் 12 ஆம் திகதி ஆற்றப்படும்
செலவு
2027 நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் சேவைச் செலவினங்களுக்காக நான்காயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டு பில்லியன் எழுநூற்றி எழுபத்தி மூன்று மில்லியன் முந்நூற்றி எண்பத்தொட்டாயிரம் ரூபா (Rs. 4,992,773,388,000) நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல் மற்றும் அரசாங்கம் கடன் பெறுவதற்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட விடயங்களுக்கான ஏற்பாடுகளை இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வழங்குகிறது.
வாக்கெடுப்பு
இதன் பின்னர், வியாழக்கிழமை (நவம்பர் 13, 2026) முதல் வியாழக்கிழமை (நவம்பர் 20, 2026) வரை 07 நாட்களுக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, வியாழக்கிழமை (நவம்பர் 20, 2026) பிற்பகல் 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.
குழுநிலை விவாதம்
அதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (நவம்பர் 21, 2026) முதல் திங்கட்கிழமை (டிசம்பர் 14, 2026) வரை 19 நாட்களுக்குக் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், திங்கட்கிழமை (டிசம்பர் 14, 2026) பிற்பகல் 6.00 மணிக்கு வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.
விவாதம் நடைபெறாத நாட்கள்
அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் வரவு-செலவுத் திட்ட விவாதம் நடைபெறும். அத்துடன், இந்த அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் முற்பகல் 9.30 மணிக்குக் கூடவுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக 2027 ஜனவரி 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான நிதியாண்டுக்கான அரசாங்கச் செலவினங்களை மேற்கொள்வதற்கும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கும், அத்துடன் தொடர்புடைய கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

