Last Updated:
ஜியோ, வெறும் தொலைத்தொடர்புச் சேவையாளராக மட்டுமின்றி, ஒரு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமாகத் தன்னை உருமாற்றி வருகிறது.
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் (Jio Platforms), இந்தியாவில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டத் தனது ‘உரிமம் பெறாத பிராட்பேண்ட் ரேடியோ’ (Unlicensed Broadband Radio – UBR) தொழில்நுட்பத்தை சர்வதேசச் சந்தைகளுக்கும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளது.
யுபிஆர் (UBR) என்பது உரிமம் தேவையில்லாத 5 GHz வைஃபை அலைவரிசைகளைப் பயன்படுத்தி, வயர்லெஸ் முறையில் பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்கும் ஒரு நவீன தொழில்நுட்பமாகும். ஃபைபர் (Fibre) கேபிள்களைப் பதிப்பது கடினமாகவும், அதிக செலவு பிடிப்பதாகவும் இருக்கும் தொலைதூர மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் கடைசி மைல் இணைப்புச் சிக்கலைத் தீர்க்க இத்தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது.
வழக்கமான 5ஜி சி-பேண்ட் (C-band) அலைவரிசையைப் பயன்படுத்தாமல் இந்த 5 GHz அலைவரிசையைப் பயன்படுத்துவதால், அதிக விலையுள்ள 5ஜி அலைவரிசையை மொபைல் சேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஃபைபர் இணைப்பிற்கு நிகராக 1 Gbps பதிவேற்ற மற்றும் பதிவிறக்க வேகத்தை வழங்கும் திறன் கொண்டது இத்தொழில்நுட்பம்.
இந்தியாவில் ஏற்கனவே சுமார் 65 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த யுபிஆர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். 2023-இல் ரேடிசிஸ் (Radisys) நிறுவனம் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ‘மிமோசா நெட்வொர்க்ஸ்’ (Mimosa Networks) நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம், ஜியோ இத்தொழில்நுட்பத்தில் தனது வலிமையை அதிகரித்துக் கொண்டது.
தற்போது பங்குச் சந்தை அறிமுகத்திற்கு (IPO) ஆயத்தமாகி வரும் ஜியோ, வெறும் தொலைத்தொடர்புச் சேவையாளராக மட்டுமின்றி, ஒரு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமாகத் தன்னை உருமாற்றி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து யுபிஆர் தொழில்நுட்பம், 5ஜி கோர் நெட்வொர்க், ஏஐ மேலாண்மைக் கருவிகள் மற்றும் நெட்வொர்க் மென்பொருள்களை ஏற்றுமதி செய்து புதிய வருவாய் வழிகளை உருவாக்க ஜியோ திட்டமிட்டுள்ளது.


