Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்கு பின் சீனியர் வீரரான புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள நிலையில், முகமது ஷமியை சேர்க்க பிசிசிஐ புறக்கணிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்னும் 2 வாரங்களில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியை நேற்றிரவு பிசிசிஐ அறிவித்தது. தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இல்லாமல் நேரடியாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் சிஇஓ விவிஎஸ் லக்ஷ்மண் தேர்வுக் குழு ஆலோசனையில் பங்கேற்றார்.

இதனால் தேர்வுக் குழு மற்றும் என்சிஏ இடையில் எந்த மோதலும் உருவாகாமல் தடுக்கப்படும். இந்த அணியில் 4 ஆண்டுகளுக்கு பின் 36 வயதாகும் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து பிட்சில் ஸ்விங் எடுபடும் என்பதால், பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருக்கிறது. முகேஷ் சவுத்ரி, ஆகிப் நபி, முகேஷ் குமார், மோசின் கான், ஹர்சித் ராணா, ஜாகிர் ஹுசைன், பிரஃபுல் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் இருக்கின்றனர்.
அப்படி இருக்கையில் திடீரென சீனியர் வீரரான புவனேஷ்வர் குமார் கொண்டு வரப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை தொடருக்கு புவனேஷ்வர் குமாரை இந்திய அணி நிர்வாகம் தயார் செய்ய முயற்சிக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. புவனேஷ்வர் குமாரின் கம்பேக் ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் மறுபக்கம் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை நோக்கி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 4 ஆண்டுகளுக்கு பின் புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய முகமது ஷமி இந்திய அணியில் மீண்டும் ஏன் சேர்க்கப்படவில்லை?
ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி, ஐபிஎல், துலீப் டிராபி என்று அத்தனை தொடர்களிலும் முகமது ஷமி விளையாடி தன்னுடைய ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மை நிரூபித்துவிட்டார். ஆனாலும் முகமது ஷமியை சேர்ப்பதில் கம்பீர் தயக்கம் காட்டி வருகிறார். இதற்கு பிசிசிஐ தேர்வுக் குழு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கி இருக்கின்றனர்.

