எஸ்.கீதபொன்கலன்
திருகோணமலை சிறைச்சாலைக்கு உணவு வழங்கும் ஒப்பந்ததாரரிடமிருந்து, 5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றபோது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (06) திருகோணமலையில் கைது செய்யப்பட்ட உதவி அத்தியட்சகர் கீர்த்தி ரூப்பசிங்கவை, இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீன் புதன்கிழமை (07) உத்தரவிட்டுள்ளார். அத்துடன், அன்றைய தினம் சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இம்மாதம் 27 ஆம் திகதி, இவ்விவகாரம் தொடர்பான கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற வழக்கின் விபர அறிக்கையை திருகோணமலையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதவான் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிறைச்சாலைக் கைதிகளுக்கு உணவு வழங்குவதற்காக உலருணவுப் பொருட்களை வழங்கும் ஒப்பந்தக்காரர் ஒருவரிடமிருந்து, இவ்விளக்கமறியலில் உள்ள சிறைச்சாலை அதிகாரி 12,35,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளார். இத்தொகையில் ஒரு பகுதியான 5 இலட்சம் ரூபாவைப் பெற்றுக் கொண்டபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டபோது இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் இலஞ்சப் பணம்தான் என்பது நிரூபணமாகியுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

