
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தப்பியோட உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரி, எதிர்வரும் 9ஆம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மூன்று நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து தலைமறைவாக இருப்பதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர், எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.
ஞானசார தேரரைக் கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையை அறிந்திருந்தும், சந்தேகநபரான வங்கி அதிகாரி தனது வாகனத்தில் தேரரை இராஜகிரிய பகுதியிலிருந்து எல்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவுகளை உதாசீனம் செய்து ஞானசார தேரர் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு உதவியமை மற்றும் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனைச் சட்டக் கோவையின் விதிகளுக்கு அமைய சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என சுட்டிக்காட்டிய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
முன்வைக்கப்பட்ட காரணங்களை ஆராய்ந்த பிரதம நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

