Last Updated:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ஹர்மன்பிரீத் கவுர், அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இந்த முடிவை அறிவித்த அடுத்த சில மணி நேரத்தில் இந்திய அணியின் புதிய கேப்டனாக 30 வயதான ஸ்மிருதி மந்தனாவை நியமித்து பிசிசிஐ அறிவித்தது.
அத்துடன், அவரின் தலைமையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியையும் அறிவித்துள்ளது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர் வருகிற 16 ஆம் தேதியும், ஒருநாள் தொடர் 23 ஆம் தேதியும் தொடங்குகிறது. ஏற்கனவே 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் பதினெட்டு டி-20 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்ற ஸ்மிருதி மந்தனா, தற்போது முழுநேர கேப்டனாக தனது பயணத்தை தொடங்க உள்ளார்.
ஐபிஎல் போன்று இந்தியாவில் நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணி, ஸ்மிருதி தலைமையில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மேலும், அதிரடி பேட்டிங் திறமையை கொண்டுள்ள ஸ்மிருதியின் தலைமையில் இந்திய மகளிர் அணி அடுத்த கட்டத்திற்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


