கோலாலம்பூர்:
மூத்த குடிநுழைவுத் துறை அதிகாரி போல நடித்து, பண மோசடியில் ஈடுபட்ட 51 வயதான குடும்பப் பெண் ஒருவருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனையும் 8,000 ரிங்கிட் அபராதமும் விதித்து, அலோர் காஜா அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நொரிசான் ஹாஷிம் என்ற ஐந்து பிள்ளைகளின் தாயாரான இவர், செப்டம்பர் 29-ஆம் தேதி தாமான் மாலிம் ஜெயாவில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்துச் சீனப் பிரஜை ஒருவரிடம் வேலை அனுமதிப்பத்திரப் விண்ணப்பம் தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தபோது, குடிநுழைரவுத் துறையினரின் ‘ஒப்ஸ் செர்காப்’ (Ops Serkap) நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார்.
போலியான குடிநுழைவுத்துறை சீருடை மற்றும் அடையாள அட்டையைப் பயன்படுத்தித் தன்னை மூத்த அதிகாரி எனக் கூறிக்கொண்ட இவர், வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வேலை அனுமதிப்பத்திரம் பெற்றுத்தர 6,000 ரிங்கிட் வரை பணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது..
நீதிபதி கமரூல் அரிஸ் கமாலுடின் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு, அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குடிநுழைவு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்வதையும் ஆவணங்களைப்போலியாக்குவதையும் சகித்துக்கொள்ள முடியாது எனவும், இத்தகைய செயல்கள் குடிநுழைவுத் துறையின் நம்பிக்கையைச் சீர்குலைப்பதாகவும் தெரிவித்துள்ள மலாக்கா குடிநுழைவுத் துறைத் தலைவர் அனிர்வான் பவுசி, பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.



