
ஞானசார தேரர் நீதிமன்றில் பொது உடையில் ஆஜர்படுத்தப்பட்டமைக்கு விசனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பௌத்த காவி உடைக் கண்ணியத்தையும் மத மரபுகளையும் அரசாங்கம் மதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் பொது உடையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையான விசனம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மத மரபுகளையும் பௌத்த காவி உடைக் கண்ணியத்தையும் மதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் இவ்விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நீதிமன்றங்கள் ஒரு சட்டக் கட்டமைப்புக்குள் இயங்குகின்றன என்பதையும், அந்த வரம்புகளைத் தாண்டி அவற்றால் செயற்பட முடியாது என்பதையும் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சமூக மரபுகள், நடைமுறைகள் மற்றும் கலாசார அடையாளங்கள் தொடர்பில் அரசாங்கங்கள் மிகுந்த உணர்வுபூர்வமாகவும் கவனமாகவும் செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞானசார தேரர் அவரது அனுமதியின்றி, வலுக்கட்டாயமாகப் பொது உடையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டதாக ஊடகச் செய்திகள் வெளிப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் கண்ணியத்தைப் பேணும் வகையில் பிரதிவாதிகள் பொருத்தமான சாதாரண உடைகளில் முன்னிலையாக அனுமதிக்கப்படுகின்ற போதிலும், ஒரு பௌத்த துறவியையோ அல்லது ஏனைய மதத் தலைவர்களையோ அவர்களின் அனுமதியின்றி அல்லது அவர்கள் சார்ந்த மத நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தாமல் பொது உடையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வருவது முற்றிலும் பொருத்தமற்ற செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நபரின் பௌத்த துறவி அந்தஸ்து அல்லது ஏனைய மதங்களின் அதிகாரப்பூர்வ அந்தஸ்து தொடர்பான தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மத நிறுவனங்களினாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் பொது உடையில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
