Last Updated:
நீர் பயன்பாடு, உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய வளங்களை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
1987-ஆம் ஆண்டு ஒளிபரப்பான புகழ்பெற்ற ‘ராமாயணம்’ தொலைக்காட்சித் தொடரில் லட்சுமணனாக நடித்து மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் பிரபல நடிகர் சுனில் லஹ்ரி.
இவர் எல் நினோவால் ஏற்படக்கூடிய வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்தும், அதனால் மனித சமூகத்திற்கு வரவிருக்கும் சவால்கள் குறித்தும் எச்சரித்து சமூக வலைதளங்களில் ஒரு முக்கிய வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.
சுனில் லஹ்ரி தனது வீடியோ பதிவில், ‘எல் நினோ’ (El Nino) காரணியின் தாக்கம் காரணமாக இயல்பு நிலைக்கு மாறான வானிலை மாற்றங்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் குறித்துப் பேசியுள்ளார். இதன் காரணமாக வழக்கமான மழைப்பொழிவு பாதிக்கப்படலாம் என்றும், விவசாய உற்பத்தி குறைந்து அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தங்களது அன்றாடப் பயன்பாடுகள் மற்றும் வளங்களின் நுகர்வை 15 முதல் 20 சதவீதம் வரை உடனடியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நீர் பயன்பாடு, உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய வளங்களை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலை குறித்துப் பொதுமக்கள் யாரும் தேவையற்ற முறையில் பயப்படவோ, பீதியடையவோத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், அதே நேரத்தில் கவனக் குறைவாகவும் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு பொறுப்புடனும், புத்திசாலித்தனத்துடனும் செயல்படுவதே தற்போதைய சூழலில் நாட்டிற்கும், எதிர்காலத் தலைமுறைக்கும் பாதிப்பை தவிர்க்கும் என்று தனது வீடியோவில் சுனில் லஹ்ரி குறிப்பிட்டுள்ளார்.


