கோலாலம்பூர்:
LRT உள்ளிட்ட நாட்டின் முக்கியப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்குப் பெரும் இடையூறுகளையும் முடக்கத்தையும் ஏற்படுத்தும் கேபிள் திருட்டுச் சம்பவங்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கிடும் வகையில் தற்போதைய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வீடமைப்பு, உள்ளூராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் மும்தாஸ் முகமட் நாவியின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், கிளானா ஜெயா LRT தடம் அடிக்கடி முடங்கியதற்குச் சாதாரணச் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமல்ல என்றும், இதன் பின்னணியில் திட்டமிட்டு இயங்கும் கேபிள் திருட்டு கும்பல்களே காரணம் என்றும் தெரிவித்தார்.
“பொதுமக்களின் அன்றாடப் பயணத்தைப் பாதிக்கும் வகையில் கேபிள் திருட்டில் ஈடுபடும் கும்பல் மீது இரக்கம் காட்டக் கூடாது. பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கவும் சட்டத் திருத்தத்தின் மூலம் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்” என்று வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சித் துறை அமைச்சர் கூறினார்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் கேபிள் திருட்டுச் சம்பவங்கள் காரணமாக மலாயா ரயில்வே நிறுவனத்தின் (KTMB) ETS அதிவேக ரயில்கள் 562 மணி நேரமும், KTM Komuter ரயில்கள் 741 மணி நேரமும் சேவைத் தாமதத்தைச் சந்தித்ததாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
மேலும், புத்ராஜெயா எம்.ஆர்.டி (MRT Putrajaya Line) வழித்தடத்தில் ஆப்டிகல் ஃபைபர் (Optical Fiber) கேபிள்கள் திருடப்பட்டதால், விரிவான பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும், இதனாலேயே கடுமையான சட்ட நடவடிக்கை அவசியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.



