கோலாலம்பூர்:
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரான லீ சியான் சுங் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியாக உள்ளதாக நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது இத்தகவலைத் தெரிவித்த துணை சபாநாயகர் டத்தோ ராம்லி முகமட் நூர், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 54(1)-இன் கீழ் இத்தொகுதி காலியாக இருப்பது குறித்துத் தேர்தல் ஆணையத்திற்குச் சபாநாயகர் டான் ஸ்ரீ ஜோகாரி அப்துல் முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத் தொகுதி காலியாக இருப்பது தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தேர்தல் ஆணையம் உரிய முடிவை அறிவிக்கும்” என்று, டத்தோ ராம்லி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதிக்கட்சியின் (PKR) மத்தியக் குழு உறுப்பினராகவும் இருந்த லீ சியான் சுங், கட்சித் தலைமை தனக்கு 3 ஆண்டுகள் இடைநீக்கம் விதித்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நாடாளுமன்றப் பிரச்சினைகள் குறித்துத் தடையின்றிப் பேச முடியாத சூழல் உருவாகியுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், கடந்த வெள்ளிக்கிழமை தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் பிகேஆர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகியது மலேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



