அதானி-யின் டார்கெட் இனி இது மட்டும்தானா..? அதிர்ந்துபோன டாடா, ஏர்டெல், ரிலையன்ஸ்!
இந்தியாவில் அடுத்த மெகா வர்த்தகம் டேட்டா சென்டரில் தான் என்பதை உணர்ந்த கௌதம் அதானி, சிமெண்ட், மின்சாரம், சோலார் எனர்ஜி போன்ற அடிப்படை கட்டமைப்பு முதலீட்டுக்கு இணையாக டேட்டா சென்டரை பார்க்கத் துவங்கியுள்ளார். கிளவுட் மற்றும் ஏஐ சேவைக்காக இந்தியாவில் டேட்டா சென்டர் அவசியமானதாக இருந்தாலும் கௌதம் அதானி பெரும் பணத்தை இத்துறையில் கொட்டுவதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.
உலகளவில் உருவாக்கப்படும் டேட்டாவில் இந்தியா மட்டும் சுமார் 20 சதவீத டேட்டாவை உருவாக்குகிறது, ஆனால் வெறும் 2 -3 சதவீத டேட்டா மட்டுமே உள்நாட்டில் சேமிக்கப்படுகிறது. இதற்கான கட்டமைப்பு போதுமானதாக இல்லாத காரணத்தால் இந்தியாவில் இருக்கும் 850 மில்லயன் மக்கள் தொகையின் டேட்டா வெளிநாடுகளில் சேமிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு ஏற்கனவே நிதியியல் தொடப்பான அனைத்து தரவுகளும் உள்நாட்டிலேயே சேமிக்க வேண்டும் என்ற உத்தரவு இருக்கும் நிலையில், ஏஐ புரட்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, டேட்டா பாதுகாப்பு காரணமாக மொத்த தரவுகளும் உள்நாட்டில் சேமித்து வைக்க வேண்டிய நிலை வரலாம். அப்படி வந்தால் தற்போதைய டேட்டா சென்டர் அளவை காட்டிலும் பல மடங்கு அதிக டேட்டா சென்டர்கள், சேமிப்பு தளமும் தேவை.
இத்தகைய அவசர நிலையை உணர்ந்து தான் தற்போது அதானி, அம்பானி, டாடா, மிட்டல் குடும்ப சாம்ராஜ்ஜியங்கள் தங்களுடைய வர்த்தகத்தையும், முதலீட்டையும் டேட்டா சென்டர் பக்கம் திருப்பியுள்ளனர்.
டேட்டா சென்டர் வர்த்தகத்தில் அதானி குழுமம் நேரடியாக இறங்காமல் எட்ஜ்கெனெக்ஸ் உடன் இணைந்து இந்தியாவில் டேட்டா சென்டர் அமைத்து வருகிறது. 2021 சேர்ந்த இக்கூட்டணி இதுவரையில் 8379 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா குரூப் ஆகியவை இணைந்து 4673 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 2 மடங்கு அதிக முதலீட்டை அதானி குழுமம் செய்துள்ளது.
டாடா குழுமம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 2 நிறுவனத்தின் வாயிலாக டேட்டா சென்டர் வர்த்தகத்தில் 1,447 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதில் முக்கியமாக எஸ்டிடி குளோபல் டேட்டா சென்டர் வாயிலாக மட்டும் 1,247 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. டிசிஎஸ் 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இந்தியாவில் டேட்டா சென்டர் வர்த்தகத்தில் ஏர்டெல் தனது Nxtra என்னும் நிறுவனத்தின் மூலம் 2013லேயே துவங்கினாலும் முதலீட்டிலும், விரிவாக்கத்திலும் பின்தங்கியுள்ளது.

