Last Updated:
ஆக்ராவில் மனைவியை கொன்று வீட்டின் தகரக் கொட்டகையில், உடலை எரித்து எலும்புகளை யமுனை ஆற்றில் வீசிய கொடூரக் கணவனை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவின் அருகே உள்ள குக்தலா கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேந்திரா. அவர் 2022-ல் அக்பராவைச் சேர்ந்த சாந்தினியைத் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு வயது மகள் உள்ளார். ஆரம்பத்தில் அன்பாக நகர்ந்த குடும்ப வாழ்க்கையில் – கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று ஏற்பட்ட சண்டையில் லோகேந்திரா வெறிச்செயலில் ஈடுபட்டு.. மனைவி சாந்தினியைக் கொடூரமாக அடித்தே கொன்றுள்ளார். பின்னர் வீட்டின் பின்புறம் இருந்த தகர கொட்டகையில், மனைவியின் உடலை போட்டு தீ வைத்து எரித்துள்ளார். கொலைக்குப் பிறகு, லோகேந்திரா தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து, வீட்டிலேயே வைத்துவிட்டார். மனைவி சாந்தினியின் செல்போனை எடுத்துச் சென்று, சிக்கந்திரா காவல் நிலைய எல்லையில் வீசிவிட்டுத் தப்பித்தார். அதன்பின் செவ்வாய்க்கிழமை இரவு அச்னேரா காவல் நிலையத்திற்குச் சென்று, தனது மனைவி காணாமல் போனதாகப் புகார் அளித்தார்.
விசாரணையின்போது, சாந்தினியின் இரண்டு வயது மகள் கடைக்கு வெளியே விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டனர். வீட்டின் சூழல் சந்தேகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அப்போதுதான் போலீசாரிடம் சமாளித்துக் கொண்டிருந்த லோகேந்திரா, சட்டென்று அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சாந்தினியைக் கொன்று வீட்டின் பின்புறம் உடலை எரித்ததை, லோகேந்திரா ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் எஞ்சிய பாகங்களை ஆக்ராவுக்குக் கொண்டு சென்று, ஆதாரங்களை அழிப்பதற்காக எலும்புகளை யமுனை ஆற்றில் வீசியதாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த தகவலின் அடிப்படையில், சாந்தினியுடையதாகக் கருதப்படும் எலும்புகள் மற்றும் அவரது செல்போனை யமுனை ஆற்றங்கரையிலிருந்து காவல்துறையினர் மீட்டனர். இதனை அடுத்து லோகேந்திராவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


