தங்கத்தை வைத்தே பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்திய குடும்பங்கள்..!!
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, ஆபத்து காலத்தில் உதவும் நண்பனாகவும் உள்ளது. நமக்கு ஒரு நிதி தேவை ஏற்படுகிறது என்றால் உடனே நம் கையில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்கலாம். வேறு எந்த ஒரு பொருளையும் இத்தனை எளிதாக பணமாக்க முடியாது. இந்த ஒரு விஷயம் தான் இரண்டு குடும்பங்களை பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்க வைத்துள்ளது.
இந்தியாவில் தங்க கடன்கள் என்றால் உடனே நினைவுக்கு வரும் பெயர்கள் முத்தூட் பைனான்ஸ் மற்றும் மணப்புரம் கோல்டு ஆகியவை தான். தங்கத்தை அடமானமாக பெற்று கடன் வழங்கும் முறையை முறையான நிறுவன வணிகமாக மாற்றி இன்று மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளன. இந்த இரண்டுமே கேரளாவை தலைமையிடமாக கொண்டு உருவாகி நாடு முழுவதும் கிளைகளை பரப்பியுள்ளன.

முத்தூட் : முத்தூட் நினான் மாதாய் என்பவர் 1887-ஆம் ஆண்டில் கேரளாவில் மளிகை கடையை தொடங்கினார். அப்போது மக்களுக்கு சிறிது சிறிதாக கடன் வழங்குவதையும் மேற்கொண்டனர். பின்னர் 1939-ஆம் ஆண்டில் முறையாக தங்க கடன் வழங்கும் தொழிலில் கால் பதித்தனர். நினானின் மூன்று மகன்களும் படிப்படியாக தொழிலை வளர்த்தனர். தற்போது முத்தூட் ஃபைனான்ஸ் (Muthoot Finance) இந்தியாவின் மிகப்பெரிய தங்க கடன் நிறுவனமாகவும், ப்ளூம்பெர்க் தரவுகளின்படி இந்தியாவின் ஐந்தாவது மிகவும் மதிப்புமிக்க வங்கி அல்லாத நிதி நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது.
ஜூன் மாத நிலவரப்படி, முத்தூட் ஃபைனான்ஸின் தங்கக் கடன் சொத்துகளின் மதிப்பு 18.5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இவர்களின் பாதுகாப்பு பெட்டகத்தில் பிணையமாக பெறப்பட்ட சுமார் 210 டன்கள் தங்கம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஜார்க் அலேக்சாண்டர் முத்தூட் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு தற்போது சுமார் 9.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

மணப்புரம் குடும்பம் : சாதாரண அடகு பிடிக்கும் கடையாக வி.பி. நந்தகுமாரால் தொடங்கப்பட்ட இந்த தொழில் 2007-ஆம் ஆண்டில் தனது முழு கவனத்தையும் தங்க கடன் துறையின் மீது திருப்பியது. இன்று இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தங்க கடன் வழங்கும் நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதன் தங்க கடன் சொத்துகளின் மதிப்பு தோராயமாக 6 பில்லியன் டாலர்கள் ஆகும். இவர்களின் வசம் சுமார் 63 டன்கள் தங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.மணப்புரம் நிறுவனத்துடன் தொடர்புடைய நந்தகுமார் குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 1.4 பில்லியன் டாலர்கள் ஆகும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தங்க கடன்கள் அதிகரித்துள்ளன. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதிகமான மக்கள் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்க முன்னுரிமை தருகின்றனர். அதாவது மற்ற கடன்களை விட எளிமையானதாக தங்க கடன்கள் இருக்கின்றன, மேலும் ஒரு பவுன் தங்கம் இருந்தாலே 80,000 ரூபாய்க்கும் மேல் இங்கே கடன் கிடைக்கும்.
சிறு வணிகர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அவசர தேவைகளுக்காக வங்கிகளை அணுக முடியாதவர்கள் உடனடியாக கடன் பெற தங்க கடன்களை தேர்வு செய்கின்றனர். இது தான் இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். வங்கிகளை விட நாம் அடகு வைக்கும் தங்கத்திற்கு இங்கே அதிக பணம் கிடைக்கும். இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் தங்களது கிளைகளை விரிவுபடுத்தி, கிராமப்புற மக்களுக்கும் எளிதில் கடன் கிடைக்க செய்ததும் முக்கிய காரணம்.
இந்தியாவின் தங்க கடன் சந்தை இன்னும் வளர்ச்சி அடையும் என கணிக்கப்படுவதால் இனி வரும் நாட்களிலும் இந்த நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும் என்றும் புதிது புதிதாக பல நிறுவனங்கள் இந்த துறையில் கால் பதிக்க தொடங்கியுள்ளன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

