Last Updated:
கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிறது
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதுடன், பாகிஸ்தான் அணிக்குக் கடுமையான பதிலடியையும் கொடுத்துள்ளது.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் இரண்டுமே தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன. ஆடவர் பிரிவின் பரபரப்பான இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் (டி20 மற்றும் ஒருநாள்) இரு அணிகளுக்கும் இடையிலான தரம் மற்றும் திறமையின் இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த வெற்றி காட்டுகிறது. மேலும், கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து பேசிய பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ், பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்தார்.
“இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை நமது அணி வீழ்த்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணி இப்போது இந்தியாவிற்கு எந்தவொரு வலுவான போட்டியையும் தருவதில்லை என்றே நான் உணர்கிறேன். நெருக்கடியான சூழ்நிலைகளை நமது வீரர்கள் கையாண்ட விதம் அபாரமானது; உலகளவில் வேறு எந்த அணியாலும் இப்படிச் செய்ய முடியாது” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தத் தொடரிலேயே இந்திய அணிதான் மிகச்சிறந்த அணியாகத் திகழ்ந்தது என்றும் பாரட்டினார்.
இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ரன்கள் குவிக்க தவறியபோதிலும், திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அபாரமான அரைசதங்களை விளாசி அணியின் பெரிய ஸ்கோருக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர். நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் இந்தியா 211 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது.
பந்துவீச்சிலும் கூட்டு முயற்சியை வெளிப்படுத்திய இந்திய அணி, பாகிஸ்தானை 192/6 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தத் தங்கப் பதக்கத்தின் மூலம், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்திய அணி 4-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.


