Tamilnadu
oi-Pavithra Mani
தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையவுள்ளது. தாராபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் கைது செய்து விசாரணை செய்யப்பட்ட சம்பவத்தால், அந்த கட்சியினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் தாராபுரத்தில் இன்று விஜய் ரோட் ஷோ செல்ல முடியாது என்று உதயகுமார் எச்சரித்துள்ளார்.
சேலத்தில் இருந்து கரூர் செல்லும் வழியில், சட்ட விரோதமாக பணம் கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. அவர்களிடம் ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் செல்வகுமாரன் பணம் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து செல்வகுமாரன் மற்றும் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகுமாரன் ஆகியோரை தாராபுரம் காவல்நிலையத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

அதிமுகவினருக்கு மிரட்டல்
இதனால் கோபமடைந்த அதிமுக தொண்டர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுக நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டுமென முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “துரோகம் செய்த தவெக வேட்பாளருக்கு செல்லுமிடம் எல்லாம் மக்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.
அமைச்சர்களும் செல்ல முடியவில்லை. இதை திசை திருப்ப விஜய் மதுராந்தகத்தில் 40 இடத்தில் பிரச்சாரம் சென்றார். எந்த இடத்திலும் மக்கள் வரவேற்பு இல்லை. தாராபுரத்தில் இன்றைக்கு ரோட் ஷோ வருகிறார். எங்களுடைய மாவட்ட செயலாளர் பொய்யான குற்றச்சாட்டு சொல்லி, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தேர்தல் பணியை முடக்குகிறார்கள். ஒட்டுமொத்த அதிமுகவிற்கும் மறைமுக மிரட்டல் விடுக்கிறார்கள். அதிமுக தொண்டர்களை மக்களை சந்திக்க விடாமல் மிரட்டுகிறார்கள்.
விஜய் ரோட்ஷோ போக முடியாது
தாராபுரத்தில் அதிகார துஷ்பிரயோகம் சர்வாதிகாரத்தை நடத்தியுள்ளனர். தாராபுரத்தில் மதுராந்தகத்தில் தவெக செய்த துரோகத்திற்கு பாடம் புகட்டும் வகையில், வாக்காளர்கள் தயாராகியுள்ளனர். இந்த கள நிலவரம் காரணமாக மாவட்ட செயலாளரை காவல் நிலையத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக அடைத்துள்ளனர். காவல்துறையினர் எங்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. தேர்தல் பணியில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அனைவரும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
அதை மீறி ஆளுங்கட்சியினர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். திரையில் பம் ஓடவில்லை. தரையில் நாடகம் நடத்துகிறார்கள். ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடிப்பதை போல மாவட்ட செயலாளரே கைது செய்து அமர வைத்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் முதலமைச்சரின் ரோட் ஷோ நடப்பது கேள்விக்குறியாகும். அவர் எந்த இடத்திற்கும் செல்ல முடியாது. ஒரு லட்சம் காவல்துறையினரை இறக்கினாலும் கட்டுப்படுத்த முடியாது. மக்கள் கொதித்து, சத்தியம் கொதித்தால் ரோடு ஷோ நடத்த முடியாது.
கதை வசனம்
சென்னையில் இருந்து முதலமைச்சர் வெளியே வர முடியாது. அதிமுக தொண்டர்களை தட்டி எழுப்பாதீர்கள். காவல்துறை விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம். முதலில் புகாரை சொல்ல வேண்டும். பணம் பிடிபட்டதாக சொல்கின்றனர். ஆனால் தாராபுரத்தில் பணம் பிடிபடவில்லை. வேறு இடத்தில் நடைபெற்றதற்கு இங்கு கதை வசனம் எழுதுகிறார்கள். எங்கள் மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. உறுதியாக சொல்கிறேன், விஜய் ரோடு ஷோ செல்ல முடியாது” என்றார்.

