Tamilnadu
oi-Velmurugan P
முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமா குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதை உருவகேலி என்று கூறி தவெகவினர் கண்டித்து வருகிறார்கள். அதற்கு திமுகவினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக முன்னாள் எம்பி புதுக்கோட்டை எம் எம் அப்துல்லா கொடுத்த பதிலடி பார்ப்போம்
அமைச்சர் நிர்மல் குமார் நேற்று ஸ்டாலினுக்கு எதிராக வெளியிட்ட பதிவில், “நான்காம் தர மேடைப் பேச்சாளர்கள் போல காலாகாலமாக தொடர்ந்து பெண்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசி கீழ்தரமாக நடந்து கொள்வதை மட்டுமே திமுகவில் தந்தையும் மகனுமாக இருக்கும் பரம்பரைத் தலைவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மனதில் இருக்கும் வக்கிரத்தை விரக்தியின் உச்சத்தில் இன்று தவெக வேட்பாளர் சத்யபாமாவை அவர்களை ஸ்டாலின் உருவக்கேலி செய்து பேசி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

பெண்ணியம் பற்றியும் கொள்கைத் தலைவர்களின் புரட்சி சிந்தனைகள் பற்றியும் பக்கம் பக்கமாக சொற்பொழிவு ஆற்றும் திமுகவினரின் உண்மை முகமே இதுதான்
என்பது மக்களுக்கு நன்றாகப் புரிந்து விட்டதால் இனி எப்போதும் மக்கள் ஆதரவை திமுக பெறப்போவது இல்லை .இந்த உண்மை தெரிந்ததால் தோல்வியின் உச்சகட்ட விரக்தியில் இருக்கும் திமுக இது போன்ற கொச்சைப் பேச்சுகளைக் கடைசி ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கிறது.
திமுக தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதுதான் நிதர்சனம்!” இவ்வாறு கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக திமுக முன்னாள் மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா வெளியிட்ட பதிவில், “பிகில் படத்துல நடிகர் விஜய் ரோபோ ஷங்கர் மகளைப் பார்த்து என்னமோ ஒரு வார்த்தை சொல்லி அடிக்கடி திட்டுவாரே!! அது என்ன வார்த்தை சொல்லி திட்டுவாரு? உங்களுக்கு நியாபகம் இருக்கா? எனக்கு நியாபகம் இல்லை. உங்க தலைவர்கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க” என்று கூறினார்.
பிகில் படத்தில் ரோபோ சங்கர் மகளை குண்டம்மா என்று விஜய் கூறுவார்.. படத்திற்காக வைக்கப்பட்ட அந்த காட்சியை வைத்து தற்போது பதிலடி கொடுத்து வருகிறார்கள் திமுகவினர்.

