Last Updated:
Asian Games | ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை பொறுத்தவரை அந்த எதிர்பார்ப்புகளை தாண்டி அனைவரின் பார்வையும் ஜப்பானில் நிலவும் வானிலையின் மீது இருக்கிறது.
ஆசிய விளையாட்டு தொடர் டி20 கிரிக்கெட் அரையிறுதியில் இலங்கையை எளிதாக வென்ற இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் உடன் மோத உள்ளது. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு தொடர் டி20 கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் இலக்கை உயர்த்தினார். 46 பந்துகளில் 80 ரன்கள் அடித்து இஷான் கிஷான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இஷான் கிஷானின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு சென்றது. 2 ரன்கள் எடுப்பதற்குள் இலங்கை 3 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
இந்திய அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 9.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 45 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் பும்ரா, அக்ஷர் படேல், அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இலங்கையை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.
வழக்கமாக இந்தியா vs பாகிஸ்தான் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இறுதிப்போட்டி என்றால் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆனால், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை பொறுத்தவரை அந்த எதிர்பார்ப்புகளை தாண்டி அனைவரின் பார்வையும் ஜப்பானில் நிலவும் வானிலையின் மீது இருக்கிறது. ஏனெனில் மழை காரணமாக போட்டி பாதிக்கும் வாய்ப்புள்ளது. நாளை போட்டி நடக்கும் போது காலையில் மழை பெய்ய 62% வாய்ப்புள்ளது. அதுவே இது பிற்பகலில் 25% வாய்ப்பிருக்க எதிர்பார்க்கப்படுகிறது.
2023-ல் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டி மழையின் காரணமாகக் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, ஆடவர் கிரிக்கெட் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள டி20ஐ அணி என்பதால், இந்தியா சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இம்முறை அப்படி நடக்க வாய்ப்பில்லை. தற்போது நடைபெற்று வரும் தொடருக்கான விதிகளின்படி, போட்டி முடிவின்றி கைவிடப்பட்டால் தங்கப் பதக்கம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.


