(டில்லிராணி முத்து)
மஞ்சோங்:
மஞ்சோங், சித்தியவான், மேடான் ஆச்சே பகுதியில் உள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு வகையான மதுபானங்களும், வரி செலுத்தப்படாத வெள்ளைச் சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், உள்ளூர் சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மஞ்சோங் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை குழுவினர், கடத்தல் பொருட்கள் தொடர்பாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி மாலை சுமார் 3.45 மணியளவில், பேராக், சித்தியவான், மேடான் ஆச்சே பகுதியில் உள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
அச்சோதனையின்போது பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 15 மதுபானப் போத்தல்கள், 185 மதுபானத் தகரக் கலன்கள் மற்றும் 1,830 வெள்ளைச் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன என்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 5,151.50 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் மஞ்சோங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் தலைவர் ஏசிபி
ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.


மேலும், அந்த வர்த்தக வளாகத்தின் பொறுப்பாளராக இருப்பதாகக் கூறிய உள்ளூர் சீனப் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்றார் அவர்.
கைது செய்யப்பட்ட பெண்ணும் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் மேலதிக விசாரணைக்காக மஞ்சோங் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில்,
இச்சம்பவம் 1967ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் 135(1)(c) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடத்தல் நடவடிக்கைகள் அல்லது வரி செலுத்தப்படாத பொருட்களின் விநியோகம் தொடர்பான தகவல்கள் தெரிந்த பொதுமக்கள், மஞ்சோங் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தை 05-6886222 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 017-6828005 என்ற வாட்ஸ்ஸாப் அவசரத் தொடர்பு எண்ணிலோ தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு ஏசிபி ஹஸ்புல்லா கேட்டுக் கொண்டார்.



