
தலதா மாளிகை உள்ளிட்ட பிரதான பௌத்த தலங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக வட்ஸ்அப்பில் அச்சுறுத்தல் விடுத்த இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன், ஒக்டோபர் 10 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள முக்கிய பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என வாட்ஸ்அப் (WhatsApp) செயலி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி தம்புள்ளை குகை விகாரையின் தலைமை விஹாராதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய தனிகம ஆனந்த தேரரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளிக்கப்பட்ட எழுத்துமூல முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த முறைப்பாட்டின்படி, வட்ஸ்அப் குழுவொன்றில் பகிரப்பட்ட தகவல்களில் கௌதம புத்தரை அவமதிக்கும் வகையிலான விடயங்களும், ஸ்ரீ தலதா மாளிகை, ஜய ஸ்ரீ மகா போதி, தூபாராமய மற்றும் தம்புள்ளை குகை விகாரை உள்ளிட்ட பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து குண்டுத் தாக்குதல்களை நடத்துவோம் என்ற அச்சுறுத்தல்களும் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் மூலம் குறித்த அச்சுறுத்தல் குறுஞ்செய்திகளைப் பரப்பியவர் இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இனைஞன் என்பது கண்டறியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியைப் பரிசோதித்தபோது, அதில் புத்தரின் உருவத்தை அவமதிக்கும் மற்றும் சிதைக்கும் வகையிலான பல புகைப்படங்களும் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் போது, பொழுதுபோக்குக்காகவே தாம் இவற்றை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டது.

