Tamilnadu
oi-Pavithra Mani
தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று மதியம் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார். கோவையில் இருந்து பிரச்சார வாகனம் மூலமாக தாராபுரத்திற்கு முதல்வர் விஜய் புறப்பட்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தலின் பரபரப்பு ஓய்வதற்குள் இடைத்தேர்தல் பரபரப்பு தொற்றி கொண்டது. முதல்கட்டமாக மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் தவெகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கே தவெகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் விஜய்
தவெகவுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்கள் ஆதரவுடன் தவெக ஆட்சியில் உள்ளது. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது. அமைச்சர்கள், முன்னள் அமைச்சர்கள் என பெரிய அணியே இரண்டு தொகுதிகளிலும் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
இந்நிலையில் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, அந்தக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக வந்த முதல்வர் விஜய் பிரச்சார வாகனம் மூலமாக தாராபுரத்திற்கு புறப்பட்டார். முதல்வர் செல்லும் வழிநெடுகிலும், பொதுமக்கள், தவெகவினர் பிரமாண்ட வரவேற்பளித்து வருகின்றனர். சாலை மார்க்கமாக தாராபுரம் சென்று 3 மணியளவில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

