India
oi-Nantha Kumar R
ஜம்மு காஷ்மீர்: தற்போது எம்எல்ஏக்கள் மாத சம்பளமாக ரூ.1.80 லட்சம் வாங்கி வரும் நிலையில் அதனை ரூ.3 லட்சமாக அதிகரிக்கும் வகையில் சட்டசயைில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிலேயே எம்எல்ஏக்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் பெயரை ஜம்மு காஷ்மீர் பெறும்.
ஜம்மு காஷ்மீரில், காங்கிரஸ் ஆதரவில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக உள்ளார். தற்போது ஜம்மு காஷ்மீரில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

நேற்று ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 5 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களை முதல்வர் உமர் அப்துல்லா சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இதில் 3 மசோதாக்கள் எம்எல்ஏக்களின் சம்பளத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டதாகும். தற்போது ஜம்மு காஷ்மீர் எம்எல்ஏக்கள் மாதத்துக்கு ரூ.1.8 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். இந்த சம்பளத்தை ரூ.3 லட்சமாக உயர்த்தும் வகையில் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
‘ஜம்மு காஷ்மீர் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களின் ஊதிய சட்டம் 1956ல் திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் எம்எல்ஏக்களின் ஊதியம் மற்றும் படிகளை நிர்வகிக்கும் சட்ட திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் மாநில எம்எல்ஏக்களின் ஓய்வூதிய சட்டம் 1984 திருத்த மசோதா உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எம்எல்ஏக்களின் சம்பளம், ஓய்வூதியம், படி தொகை உள்ளிட்டவற்றை மாற்றியமைக்கும் வகையில் இந்த சட்ட திருத்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது உள்ள எம்எல்ஏக்களின் ஊதியம் ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர உள்ளது. தொலைபேசி கட்டண செலவுகள், வீட்டு கடன் தொடர்பான அம்சங்களை உள்ளடக்கி எம்எல்ஏக்களின் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு விரைவில் சட்டசபையில் ஒப்புதல் கிடைக்க உள்ளது. ஏற்கனவே சம்பள உயர்வு பற்றி முந்தைய கூட்டத்தொடரில் விவாதம் நடத்தி தனியாக குழுக்கள் அமைத்து இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இது விரைவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. இது நடக்கும் பட்சத்தில் இந்தியாவிலேயே எம்எல்ஏக்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் பெயரை ஜம்மு காஷ்மீர் பெறும். ஏனென்றால் நம் நாட்டில் ஜார்கண்ட்டில் மட்டும் தான் எம்எல்ஏக்களுக்கு ரூ.2.80 லட்சம் மாதசம்பளமாக வழங்கப்படுகிறது. இதுதான் நம் நாட்டிலேயே எம்எல்ஏக்களுக்கான அதிக சம்பளமாக இருக்கும் நிலையில் ஜார்கண்ட்டை, ஜம்மு காஷ்மீர் முந்த உள்ளது.
தமிழகத்தை எடுத்து கொண்டால் தற்போது எம்எல்ஏக்களுக்கு ரூ.1.05 லட்சம் வரை சம்பளம் கிடைக்கிறது. இதனை சமீபத்தில் முதல்வர் விஜய் உயர்த்தி அறிவித்தார். எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்று கூறிய முதல்வர் விஜய் கார் ஓட்டுநர் நியமனம் செய்து வாகன எரிபொருள் மற்றும் பராமரிப்பிற்காக மாதந்தோறும் ரூ.75,000 வழங்கப்படும். அனைத்து எம்எல்ஏக்களுக்குமு் தங்களுக்கென்று ஒரு உதவியாளரை நியமித்து கொள்ளலாம். அதற்காக மாதந்தோறும் ரூ.25,000 அரசின் சார்பில் வழங்கப்படும் என்று கூறினார். இதன்மூலம் எம்எல்ஏக்களின் சம்பளம் ரூ.1.05 லட்சத்தில் இருந்து ரூ.2.05 லட்சமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

