‘தி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் குளோபல் ரேங்கிங் 2026’ வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த மலேசிய கடவுச்சீட்டு, தற்போது உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக உயர்ந்துள்ளது. இந்தச் சாதனை, அனைத்துலக அளவில் மலேசிய கடவுச்சீட்டின் வலிமையையும் அது ஏற்றுக்கொள்ளப்படுவதையும் பிரதிபலிக்கிறது என்று மலேசிய குடிவரவுத் துறை (JIM) இன்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் அறிவித்துள்ளது.
இந்தத் தரவரிசையின் அடிப்படையில், மலேசிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 175 இடங்களுக்குச் செல்ல முடியும். இதில் 129 இடங்கள் விசா இல்லாமலும், 46 இடங்கள் வந்தவுடன் விசா பெறும் வகையிலும், 23 இடங்கள் விசா தேவைப்படும் வகையிலும் உள்ளன என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தரவுகளின் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்டதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மலேசியா, சிங்கப்பூருடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது, ஸ்பெயின் மூன்றாவது இடத்தில் உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில், புருனேயின் கடவுச்சீட்டு உலகில் 18ஆவது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து திமோர்-லெஸ்டே (45), தாய்லாந்து (52), இந்தோனேசியா (55), பிலிப்பைன்ஸ் (64), வியட்நாம் (71), கம்போடியா (73), லாவோஸ் (78), மியான்மர் (85) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.



