Last Updated:
தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு அதன் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, புதுடெல்லியில் நடைபெற்ற ‘தொழில்துறை உறவுகள் மற்றும் தொழிலாளர்கள்’ பற்றிய CII-EFI தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மத்திய அரசு செயல்படுத்தி வரும் விரிவான சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது- தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC) மூலம் நாட்டில் சுமார் 25 கோடி மக்களுக்கு மத்திய அரசு சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்து வழங்குகிறது. அதேபோல், ஏழை மற்றும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், சுமார் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், நாட்டின் சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ. 2,000 (ஆண்டுக்கு ரூ. 6,000) நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. மேலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெண்களின் பொருளாதார சுயசார்பை ஊக்குவிக்க மாதம் ரூ. 1,200, ரூ. 1,500 அல்லது ரூ. 2,000 வரை நிதியுதவி வழங்கும் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தொழிலாளர் நலன் மற்றும் தொழில் உறவுகளில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) உலகளாவிய நடைமுறைகளைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் தனித்துவமான சமூக, பொருளாதார மற்றும் பாரம்பரிய அமைப்புகளையும் கருத்தில் கொண்டு கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். தொழிலாளர் நல நிதி மற்றும் ‘செஸ்’ (Cess) நிதியின் பயன்பாடுகளை மாநில அரசுகள் முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும். அதில் உள்ள குறைகளைக் களைந்து தொழிலாளர்களின் நீண்டகால நலனுக்காகவும் சமூகப் பாதுகாப்பிற்காகவும் அந்த நிதியைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு அதன் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். தொழிலாளர் சட்டப் பயிற்சிப் பட்டறைகள் மூலம் அதிகாரிகளுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார்.


