
இலங்கையிலுள்ள காட்டு யானைகளில் 30 சதவீதமானவை செவிப்புலனை இழந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தரமற்ற யானை வெடிகள் மற்றும் தீவிரமடையும் மனித-வனவிலங்கு முரண்பாடுகள் குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் வாழும் காட்டு யானைகளில் சுமார் 30 சதவீதமானவை செவிப்புலனை இழந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
தரமற்ற ‘அலி வெடி’ எனப்படும் யானை வெடிகளைப் பயன்படுத்துவதே இந்நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்களைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
யானைகள், குரங்குகள், காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றிகள் மற்றும் மயில்கள் ஆகிய விலங்குகளால் தீவிரமடைந்து வரும் மனித-வனஜீவராசிகள் முரண்பாடுகள் தொடர்பில் விரிவாகக் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், சில பிரதேசங்களில் யானை-மனித மோதலை விடவும் குரங்கு-மனித மோதல் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்வாறான வனவிலங்கு மோதல்கள், நாட்டின் விவசாய உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பாரிய சவாலாகவும் பேரழிவாகவும் மாறியுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.
காட்டு விலங்குகளின் நடமாட்டத்தால் விவசாயிகளின் பயிர்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருவதால், நாட்டின் உணவு உற்பத்திப் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை, துப்பாக்கிச் சூடுகள் மற்றும் மனிதர்களின் பல்வேறு செயற்பாடுகள் காரணமாக வனஜீவராசிகளுக்கு, குறிப்பாக யானைகளுக்கு ஏற்படும் உடலியல் பாதிப்புகள் குறித்தும் அவர் அவதானம் செலுத்தினார். பல விலங்குகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாவதுடன், அவற்றின் உடல்களில் தோட்டாக்கள் புதைந்து அவதியுறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யானை வெடிகள் வெடிக்கும் போது ஏற்படும் அதி பயங்கர சத்தம் குட்டி யானைகள் உட்பட அனைத்து யானைகளையும் மிகக் கடுமையாகப் பாதிப்பதாகவும், இதன் காரணமாகக் காலப்போக்கில் பல யானைகள் தமது கேட்கும் திறனை முற்றாக இழந்துவிடுவதாகவும் அவர் விவரித்தார்.
காடுகளுக்குள் நிலவும் உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறையும், அதேவேளை கிராமப்புறப் பகுதிகளில் அவை தாராளமாகக் கிடைப்பதுமே விலங்குகள் மனிதக் குடியேற்றங்களை நோக்கிப் படையெடுப்பதற்கான பிரதான காரணமாகும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
காடுகளுக்குள்ளேயே விலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் நீர் வசதிகளை உறுதிசெய்வதன் மூலமே இந்த மனித-வனஜீவராசிகள் முரண்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வைக் காண முடியும் என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன வலியுறுத்தினார்.

