காஜாங்:
காஜாங், செமினியி கம்போங் பாரு காலைச் சந்தைக்கு எதிரே பழங்கள் வாங்கிக் கொண்டிருந்த 54 வயது உள்ளூர்ப் பெண்ணின் கைப்பை வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தைக் குறித்துத் தொடர்புடைய மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நேற்று நண்பகல் சுமார் 12.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில், இது குறித்து பிற்பகல் 1.28 மணியளவில் காவல் துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது.
“மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், அப்பெண் வைத்திருந்த கைப்பையைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். அந்தப் பையில் ரொக்கப் பணம், கைப்பேசி மற்றும் முக்கியமான தனிப்பட்ட ஆவணங்கள் இருந்தன. நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் அப்பெண்ணிற்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை” என்று, காஜாங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டென் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.
சம்பவ இடத்தில் தப்பியோடிய சந்தேகநபரை அடையாளங்காணவும் அவரைக் கைது செய்யவும் காவல் துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 392-இன் (வழிப்பறி) கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்த பொதுமக்கள், உடனடியாகப் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹம்மது நசிருல்ஸாஹின் முஹம்மது ஹாஷிமை 017-8881475 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் ஒரு காவல் நிலையத்திலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



