Last Updated:
ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் இருந்தபோது இந்தியா 7 புள்ளிகள் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்தது. இறுதியில் 40-34 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கபடி இறுதிப்போட்டியில், இந்திய அணி 40-34 என்ற புள்ளி கணக்கில் வலிமைமிக்க ஈரான் அணியை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இப்போட்டி தோக்காய் சிட்டிசன் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது.
இதன் மூலம், ஆசிய விளையாட்டு வரலாற்றில் இதுவரை நடத்தப்பட்ட 10 கபடித் தொடர்களில், இந்தியா தனது 9வது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி ஆசிய கபடியில் தன் ஆதிக்கத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது. (2018 ஜகார்தா ஆசிய விளையாட்டில் மட்டுமே ஈரான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது).
இறுதிப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. போட்டியின் ஆரம்பத்தில் ஈரான் ஆதிக்கம் செலுத்தியதால், இந்திய அணியில் இரண்டு வீரர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அப்பொழுது இந்திய அணி 7-9 என பின்தங்கியிருந்த நிலையில், ஜெய்தீப் தஹியா ஈரானின் நட்சத்திர வீரர் முகமதுரெசா ஷாட்லூய்-ஐ ‘சூப்பர் டேக்கிள்’ செய்து இந்தியாவிற்கு ஆபத்தில் இருந்து முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இருப்பினும், ஈரானின் அமீர்முகமது ஜாஃபர் தானேஷ் தனது சிறந்த ரைடிங் திறமையால் இந்தியாவை முதல் ‘ஆல்-அவுட்’ செய்ய உதவினார். தொடர்ந்து அர்ஜுன் தேஷ்வாலின் அதிரடி ரைடிங் மற்றும் டேக்கிள் மூலம் இந்தியா 16-14 என முன்னிலை பெற்றது. ஆனால், ஈரான் அணி உடனே பதிலடி கொடுத்து, ‘சூப்பர் டேக்கிள்’ செய்து முதல் பாதியின் முடிவில் 18-17 என்ற புள்ளிக் கணக்கில் ஒரு புள்ளி முன்னிலையுடன் இடைவேளைக்குச் சென்றது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இந்திய அணி புதுவேகத்துடன் களம் கண்டது. சுமித் செய்த அற்புதமான தடுப்பாட்டங்கள் ஆட்டத்தின் போக்கையே இந்தியாவின் பக்கம் திருப்பியது. சுமித்தின் ஆக்ரோஷமான டிஃபென்ஸால் எழுச்சி பெற்ற இந்திய அணி, ஈரானை முதல்முறையாக ‘ஆல்-அவுட்’ செய்து 29-24 என 5 புள்ளிகள் முன்னிலை பெற்றது. அஸ்லம் இனாம்தாரின் சாதுரியமான ரைடிங்கும் இந்திய அணியின் பலத்தை அதிகரித்தது.
போட்டியின் கடைசி நிமிடங்களில் ஈரான் அணியின் ஷாட்லூய் தொடர்ந்து புள்ளிகளைச் சேகரித்து போராடிய போதிலும், இந்திய ரைடர்கள் நிதானமாக விளையாடி முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டனர். ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் இருந்தபோது இந்தியா 7 புள்ளிகள் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்தது. இறுதியில் 40-34 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா, வங்கதேசம், தென் கொரியா, சைனீஸ் தாய்பே மற்றும் ஜப்பான் அணிகளை எதிர்கொண்டு அரையிறுதிக்கு முன்னேறியது. இத்தொடரில் அரையிறுதியில் தோல்வியடைந்த தாய்லாந்து மற்றும் சைனீஸ் தாய்பே அணிகள் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றன.


