Last Updated:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் ஊதியத்தைக் குறைத்துள்ள நிதி நெருக்கடிச் சூழலுக்கு மத்தியில் இத்தொடர் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் வலைப்பயிற்சியின் போது வலது முழங்கையில் காயமடைந்துள்ள சம்பவம் அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற தீவிர வலைப்பயிற்சியின் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பயிற்சியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய லென்த் பந்து, எதிர்பாராத விதமாக அதிகமாக எழும்பி சுப்மன் கில்லின் வலது முழங்கையை பலமாகத் தாக்கியது.
பந்து பட்ட உடனே கடும் வலி காரணத்தால் பேட்டை கீழே போட்ட கில், உடனடியாகப் பயிற்சியில் இருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து, இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயின் அவருக்கு சுமார் 20 நிமிடங்கள் தீவிர சிகிச்சை மற்றும் முதலுதவி அளித்தார்.
இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, சுப்மன் கில் அன்றைய பயிற்சி அமர்வில் மீண்டும் பேட்டிங் செய்ய வரவில்லை. அவருடன் அருகில் பயிற்சி செய்து கொண்டிருந்த விராட் கோலி மற்றும் பந்துவீசிய சிராஜ் ஆகியோர் கில்லின் நிலையைக் கேட்டறிந்தனர். இருப்பினும், சிகிச்சைக்குப் பிறகு கில் சக வீரர்களுடன் இயல்பாகப் பேசுவதைக் காண முடிந்ததால், காயம் பெரிதாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஹார்திக் பாண்டியா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், கேப்டன் கில்லின் இந்த காயம் இந்திய அணிக்கு கூடுதல் கவலையை அளித்துள்ளது. நாளை நடைபெறவுள்ள முதல் போட்டியில் அவர் விளையாடுவாரா என்பதை அணி நிர்வாகம் அவரது உடல்நிலையைக் கண்காணித்த பிறகே முடிவு செய்யும்.
இதனிடையே,. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் ஊதியத்தைக் குறைத்துள்ள நிதி நெருக்கடிச் சூழலுக்கு மத்தியில் இத்தொடர் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


