புத்தளம் மாவட்டத்தில் ஒரு போட்டோ பிரதிக்கு ரூ.850 அறவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த கடையில் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டதைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் செப்டெம்பர் 25ஆம் திகதி குறித்த கடையில் சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது, நுகர்வோர் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த கடைக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை வழமையாக சந்தை கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருவதுடன், நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் விதிகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து வருகிறது.
நியாயமற்ற விலையிடல் மற்றும் சந்தையில் இடம்பெறும் ஏனைய முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்கள் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (a)

