கோலாலம்பூர்:
புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையின் (NKVE) தெற்கு நோக்கிய பாதையில், இன்று மாலை கனமழைக்கு இடையே மரம் ஒன்று வீழ்ந்து பாதையை முழுமையாக மறித்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று மாலை 5.40 மணியளவில் விரைவுச்சாலையின் 22.9-ஆவது கிலோமீட்டர் (KM 22.9 S) பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகப் புக்கிட் அமான் போக்குவரத்துக் புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை (JSPT) தெரிவித்துள்ளது.
“மழை பெய்து கொண்டிருந்த போது நிகழ்ந்த இச்சம்பவத்தினால் பாதையின் அனைத்து வழிகளும் முற்றாக அடைபட்டன. இதன் காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் மிகவும் மெதுவாக நகர்ந்து சென்றதால் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவுமில்லை” என்று, புக்கிட் அமான் போக்குவரத்துக் புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை (JSPT) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, விரைவுச்சாலை மேலாண்மை மையம் (TMC) உடனடியாகத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு (JBPM) தகவல் தெரிவித்து, சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டது.அதேவேளையில், NKVE EMPV ரோந்துப் படை, பிளஸ் ரொண்டா (PLUS Ronda) மற்றும் விரைவுச் செயலணி மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் களமிறங்கிப் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளிலும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
இப்பாதையைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குவதோடு, களத்தில் உள்ள அதிகாரிகளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



