ஈரானுக்கு சீனா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் தெளிவுபடுத்தியுள்ளதாக சீனாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் பெர்டியூ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு சீனா வழங்கக்கூடிய உளவுத்தகவல்கள், உதிரிப்பாகங்கள் அல்லது இராணுவ உபகரணங்கள் உள்ளிட்ட எந்தவித நேரடி அல்லது மறைமுக உதவியும் ஏற்றுக்கொள்ளப்படாது என அமெரிக்கா சில வாரங்களுக்கு முன்னரே சீனாவிடம் தெளிவுபடுத்தியதாக பெர்டியூ கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கைகள் தொடர்பில் சீனா ஈரானுக்கு உதவுகிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சீனாவிடமிருந்து மறைமுக ஆதரவு இருப்பதாக அமெரிக்கா கருதுவதாகவும், எனினும் அதற்கான நேரடி ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரான் தொடர்பான அமெரிக்காவின் நலன்கள் குறித்தும் ஜனாதிபதி ட்ரம்ப், சீன ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு செப்டம்பர் 24ஆம் திகதி நடைபெற்றது.

