கோலாலம்பூர்:
அனைத்துலக முக்கியத்துவம் வாய்ந்த ‘ராம்சார்’ (Ramsar) ஈரநில அமைவிடமான தாசிக் பெரா நிரந்தர வனப்பகுதியில் சட்டவிரோதமாக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டதால், பகாங் மாநில அரசாங்கத்திற்கு சுமார் RM387.8 மில்லியன் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
வெட்டப்பட்ட மரங்களின் அடிக்கட்டைகள் , பிரீமியம் மற்றும் மரங்களின் இழப்பீட்டு மதிப்பை கணக்கிட்டதன் அடிப்படையில் இந்த பெரும் தொகைக் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து பகாங் மாநில வனத்துறையின் துணை இயக்குநர் (செயல்பாடு) டாக்டர் கிரிப்பின் அகெங் கூறுகையில், அழிக்கப்பட்ட ஒவ்வொரு ஹெக்டேர் நிலத்திற்கும் தோராயமாக RM55,400 இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“பகாங் மாநிலத்தின் மரங்களின் மதிப்பீட்டு அளவின்படி, ஒரு ஹெக்டேருக்கு RM55,400 வீதம் ஆக்கிரமிக்கப்பட்ட 7,000 ஹெக்டேர் நிலத்தைக் கணக்கிட்டால் மொத்தம் RM387.8 மில்லியன் இழப்பு ஏற்படுகிறது. எனினும், இது ஒரு தோராயமான மதிப்பீடே; களத்தில் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னரே துல்லியமானத் தொகை தெரியவரும்.” என்று அவர் சொன்னார்.
கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் சர்வதேச ‘ராம்சார்’ அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த இயற்கை வனப்பகுதியில், சுமார் 7,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு எண்ணெய்ப் பனை, ரப்பர் மற்றும் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர் ஓராங் அஸ்லி பழங்குடி மக்களின் பாரம்பரிய நில உரிமை மற்றும் அவர்களின் நடமாட்டப் பகுதிகளைப் சாக்காகப் பயன்படுத்தி, பின்னணியில் இயங்கும் சூத்திரதாரிகள் அல்லது கிரிமினல் கும்பல்கள் இச்சட்டவிரோத நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.



