
செயற்கை நுண்ணறிவு மனித கட்டுப்பாட்டை மீறி சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும் அபாயம் குறித்து ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் எச்சரித்துள்ளனர்.
நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சி கண்டுவரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் விரைவில் சுயமாகத் தங்களை மேம்படுத்திக்கொண்டு மனித கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடிய பேராபத்து காணப்படுவதாகவும், இது சர்வதேச பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு மத்தியில், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ழோன் நோயல் பரோ தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகளுடனான உயர்மட்டக் கலந்துரையாடலிலேயே இந்த விடயம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணியில் உள்ள ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சாம் ஆல்ட்மேன், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி டேரியோ அமோடேய், ஹக்கிங் பேஸ் இணை நிறுவனர் கிளெமென்ட் டிலாங்கு மற்றும் செயற்கை நுண்ணறிவின் பிதாக்களில் ஒருவராகக் கருதப்படும் யோஷுவா பெஞ்சியோ ஆகியோர் இச்சந்திப்பில் உரையாற்றினர்.
செயற்கை நுண்ணறிவைச் சரியான முறையில் நிர்வகிக்கத் தவறினால், அது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும் என எச்சரித்த அமோடேய், எல்லைகளைத் தாண்டி எழும் இத்தகைய முன்னெப்போதும் இல்லாத சவாலை எந்தவொரு தனி நாடாலும் தனித்துக் கட்டுப்படுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஆய்வகங்கள் மாத்திரம் தனித்து இவ்வாறான தீர்மானங்களை எடுக்க முடியாது என்றும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களின் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பின் ஊடாகவே முறையான கட்டுப்பாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் எனவும் சாம் ஆல்ட்மேன் உலகத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும், எதிர்காலத்தில் அல்காரிதம்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்வதன் ஊடாக போர்ச் சூழல் ஒன்று உருவாகிவிடுமோ என்ற நடைமுறை அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த உலகளாவிய கண்காணிப்பு வழிமுறைகள் அவசியம் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உலகளாவிய அமைப்புகளின் கீழ் கட்டுப்படுத்தும் எந்தவொரு திட்டத்தையும் தாம் முற்றாக நிராகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சீனாவை விட அமெரிக்கா இத்துறையில் பல மடங்கு முன்னிலையில் இருப்பதாகவும், தொழிற்புரட்சியை விடப் பெரியதாக உருவெடுத்துள்ள இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்தாமல் ஊக்கப்படுத்துவதே தமது நிலைப்பாடு எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
உலகளாவிய ஒழுங்குமுறைகள் அவசியமென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், சர்வதேச வல்லரசுகளின் மாறுபட்ட அணுகுமுறைகளுக்கு மத்தியில் செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு விவகாரம் சர்வதேச அரங்கில் தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளது.

