Last Updated:
சமையல் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் சமையல் எண்ணெய் விலை 2 தவணையாக 10 முதல் 12% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 60 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து பெறுகிறது. பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகியவை அதிகளவில் இறக்குமதியாகின்றன. மேற்காசிய போர் காரணமாக உலகளவில் சமையல் எண்ணெய் விலை 15% அதிகரித்துள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நெருங்குவதால் எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம் இருந்தது. இதனால் எண்ணெய் விலையை குறைக்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சுத்திகரிக்கப்படாத பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய்க்கான இறக்குமதி அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய் மீதான 10 சதவீத வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டு, பூஜ்ஜிய சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய்க்கான சுங்க வரி 32.5 சதவீதத்திலிருந்து 27.5 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்க்கான வரி 22.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு மத்திய அரசு வரியை குறைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த வரி குறைப்பு நடவடிக்கை மூலமாகச் சில்லறை விற்பனை சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது


