Last Updated:
ஒவ்வொரு தனிநபரின் வீட்டையும் சென்றடைந்த இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் சுமார் 2.86 கோடி ஏழை மற்றும் மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, 2006-ஆம் ஆண்டில் ‘ஜோதிகிராம் திட்டம்’ (Jyotigram Yojana) தொடங்கப்பட்டது.
கிராமப்புறங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படத் தொடங்கியது. இதன் முதல் 1,000 நாட்களில் சுமார் 20 லட்சம் மின் கம்பங்கள் நட்டப்பட்டு, ஒரு லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு மின்கம்பிகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் 18,000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெற்றிகரமாக மின்சாரம் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் பிரம்மாண்ட வெற்றியையும், குறுகிய காலத்தில் அடைந்த இலக்கையும் கண்டு வியந்த அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், நேரடியாக குஜராத்தில் உள்ள ஜோதிகிராம் கிராமத்திற்கு வருகை தந்து, இத்திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
2014-ஆம் ஆண்டில் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, இந்தியாவில் சுமார் 18,452 கிராமங்கள் மின்சார வசதி இன்றி இருளில் மூழ்கியிருந்தன. இந்த சவாலை ‘மிஷன் மோட்’ (Mission Mode) அடிப்படையில் கையில் எடுத்த மத்திய அரசு, ‘தீன் தயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜனா’ (Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana) திட்டத்தின் மூலம் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் 100% மின்சாரம் வழங்கும் இலக்கை முழுமையாக அடைந்தது.
கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டு சேர்த்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு குடும்பத்தின் வீட்டிற்கும் மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘சௌபாக்கியா திட்டம்’ (PM Sahaj Bijli Har Ghar Yojana – Saubhagya) தொடங்கப்பட்டது.
கிராமங்களைத் தாண்டி ஒவ்வொரு தனிநபரின் வீட்டையும் சென்றடைந்த இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் சுமார் 2.86 கோடி ஏழை மற்றும் மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.
ஒட்டுமொத்தமாக, குஜராத்தில் 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கத் தொடங்கி, பின்னர் நாட்டின் கடைக்கோடி கிராமங்கள் மற்றும் கோடிக்கணக்கான வீடுகளுக்கு வெளிச்சம் தந்த இந்த மின்கட்டமைப்பு சீரமைப்பு பயணம், பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொது சேவைப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான வரலாற்று சாதனையாகக் கருதப்படுகிறது.


