சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மட்டக்களப்பு – செங்கலடி நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
செங்கலடி பிரதான வீதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அனோஜனுக்கு சவுதி அரேபிய அரசாங்கத்தினால் மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சி
சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, இலங்கை அரசாங்கம் சவுதி அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியில் தலையிட்டு, மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர்கள், ஏறாவூர் நகர சபை பிரதி தவிசாளர் ஞா. கஜேந்திரன், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்களான செ. நிலாந்தன், அ. நிதர்சன், மு. உதயராஜ் மற்றும் க. நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், செங்கலடி வர்த்தக சங்க உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் பங்கேற்று அனோஜனுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு, “அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
போராட்டத்தை முன்னெடுக்க பிரதான காரணம்
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குவதற்காக சவுதி அரேபிய அரசாங்கத்துடன் தேவையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, அவரை தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க பிரதான காரணம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
எனவே, தங்களது கோரிக்கைகளை செவிமடுத்து அனோஜனை காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

