Last Updated:
இந்தியா-ஜப்பான் டி20 போட்டிக்கு டுஜுவான் புயல் அச்சுறுத்தல். காண்டோ பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு. போட்டி நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
இந்தியா – ஜப்பான் அணிகளுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க டி-20 கிரிக்கெட் போட்டியை காண உள்ளூர் ரசிகர்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்தியா – ஜப்பான் இடையே 75 ஆண்டுகள் நட்புறவை பறைசாற்றும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே ஒரே ஒரு போட்டி கொண்ட டி-20 தொடரை நடத்த ஐசிசி இசைவு தெரிவித்தது. அதன்படி அங்குள்ள காண்டோ நகரத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கிரிக்கெட் வரலாற்றில் ஜப்பான் அணி முதல்முறையாக இந்திய அணியுடன் விளையாட உள்ளது.
டி-20 உலக சாம்பியனான இந்திய அணி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிக்காக சென்றுள்ள ஷ்ரேயஸ் தலைமையிலான வலுவான இந்திய அணியை ஜப்பான் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே ஜப்பானை அச்சுறுத்தும் டுஜுவான் புயல் காண்டோ பகுதியை நெருங்கியுள்ளது.
இதனால், பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மழை காரணமாக இந்திய அணி நேற்று பயிற்சி மேற்கொள்ளவில்லை. எனவே, ஜப்பான் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய போட்டி மழை குறுக்கீடு இன்றி நடைபெறுமா என்பதே அந்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


