குவா மூசாங்:
கிளந்தான், குவா மூசாங் மாவட்டத்தில் நிலவி வரும் வெள்ளப்பெருக்கு காரணமாக, 22 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 81 பேர் தற்காலிக நிவாரண மையத்தில் (PPS) தொடர்ந்து தஞ்சமடைந்துள்ளனர்.
சமூக நலத்துறை (JKM) அதிகாரப்பூர்வத் தகவலின்படி, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் எஸ்கே லிமாவ் கஸ்தூரி 1 பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மாவட்டத்தில் பெய்து வரும் இடைவிடாத பலத்த மழை காரணமாகச் சுங்கை லிங்கியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, கம்போங் பாசிர் லிங்கி, போஸ் லெபீர் பகுதியை இணைக்கும் லிங்கி பாலம் நேற்று காலை முதல் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
“இந்தப் பாலம் நீரில் மூழ்கியதால், கம்போங் பாசிர் லிங்கியில் வசசிக்கும் மெண்ட்ரிக் மற்றும் பாடெக் சமூகங்களைச் சேர்ந்த சுமார் 600 ஒராங் அஸ்லி பழங்குடியின மக்களின் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.”
இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காகக் கிராமத்தை விட்டு வெளியேறப் படகுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



